Saturday, August 13, 2016

காத்திருப்பேன்

இப்படி ஆழமாய்,
அழுத்தமாய்,
அன்பாய் காதலிக்க ,
உன்னால் மட்டும்தான்
முடியும் என கர்வம் கொள்ளாதே ,
உன் மாணவன் நான்,
உன்னைவிட, உன்னை அதிகம் காதலித்து,
ஒரு நாள் உன்னை வென்றாலும் வெல்வேன்,
ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளாமல்
உன்னிடம் தோற்றுப்போவேன்,
எப்படியும் நீ கண்டுபிடித்து
காதுமடல் திருகும் நாள் வரை
காத்திருப்பேன்....

நிம்மதி

காலையில் இருந்து
கவிதை எழுதி
மிக தளர்வாக
உணர்கின்றேன்,
தூங்கலாம்தான்
ஓய்வில் இந்த வாழ்வை
கழிப்பதை விட,
உனக்கான கவிதை தேடலில்
களைத்து தோற்றாலும்
அந்த நிம்மதி போதுமெனக்கு....

குட்டிகுறை

குறையொன்றுமில்லை என நான் கூறுகையில்,
அதனுள் இருக்கும் குட்டிகுறையை
கண்டுபிடித்து
என் குறைதீர்க்கிறாய் நீ...
  காதலில் ஊடல் மட்டுமே பார்த்த எனக்கு,
  நீ செய்வது காதலில் ஊடுருவல்....

மீண்டும் முதல் வரிக்கு வா

பிள்ளை வரம் வேண்டி,
ஆலமரம், அரசமரம்
சுற்றி வந்த பின்
பிறந்த முதல் குழந்தை நீ..

உன் தந்தைக்கு நீ
தேவதையென்பதையும்,
தாய்க்கு, தாய்மை கொடுத்த
முதல் கடவுள் நீ
என்றும் உனக்கு தெரியுமா?

உன் குடும்ப கூட்டிற்கு
கேட்ட நேரம் வந்தபோது
தனியொருவளாய்
வெளியேறி
அத்தனை குரூரத்தையும்
ஒற்றை ஆளாய்
நெஞ்சில் தாங்கிக்கொண்ட
குலசாமி நீ தெரியுமா ?

ஆடிக்கழிக்க வேண்டிய
இளமையின் ஒரு பகுதியை
அழுது கழித்தவள் நீ தெரியுமா?

ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
வந்து
சிறைப்பட்ட ஒரு கைதியை
ஒற்றை பூனை குட்டியை
கையில் ஏந்திக்கொண்டு
காப்பாற்றிய ,
காவல் தெய்வம் நீ தெரியுமா?

மீண்டும் முதல் வரிக்கு வா,
நீ தேவதை என்பதை
மட்டும் ஒப்புக்கொள்,
நீ கடவுள் என்பதை நாங்கள்
ஏற்கனவே ஒப்புக்கொண்டுவிட்டோம்...

நீ யாரென சொல்ல வேண்டாம்

நீ யாரென சொல்ல வேண்டாம்
உன் தோழி யாரென கேட்க மாட்டேன்,
யாரையும் முந்தாமல்,
எதையும் சந்திக்காமல்,
எதையும் நிரூபணம் செய்யாமல்,
எதையும் புரியவைக்க முயலாமல்,
வெட்டுப்பாறையில் நுழையும் வேர் போல
தீர்க்கமாய் இந்த வாழ்வில் நுழைவோம்...
நம் காதலின் தடம் ,
நம் வாழ்வெங்கும்,
சிதறிக்கிடப்பதை
எவரேனும் சுட்டிக்காட்டினால்
சட்டை செய்யாமல்
காதலித்து திரிவோம் கர்வமாய்...

தாண்டிப்போவோம் வா

"உயிரே உன்னை உன்னை
எந்தன் வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ..
இனிமேல் வெயில், புயல், மழை
பாலை, சோலை
இவை ஒன்றாக கடப்போமே"

தாமரையின் இந்த கவிதையை
தாண்டிப்போகவேண்டும்
உறுதியாய் உன் மூச்சை
இழுத்துக்கொள் ..
என் கைகளை
இறுக பற்று
இனி எந்த ஒரு நொடியிலும்
உன் கைகள் 
இந்த கவிதைக்காய்
நடுங்காது...
ஒரே தாவில்
இந்த கவிதையை
தாண்டிப்போவோம் வா....


அன்பில் அவள்

அன்பில் அவள்
சேர்க்கதுடித்த அந்த
காதலையும்
சேர்த்து,
நானே காதலிக்கபோகிறேன்....
ஒரு வெறிகொண்ட
வேங்கையின்
வேட்டையை போல,
என் காதல்
சற்று மூர்க்கமாய் கூட இருக்கும்,
விட்டதை பிடிக்க
எனக்கு வேறு வழி தெரியவில்லை...

நகம் வெட்டும் நேரத்தில்

நகம் வெட்டும் நேரத்தில்
நூறு கவிதைகள் எழுதி
அவள் அழகை
நேர்த்தியாய் பதியவே
விரும்புகிறேன்...

ஒரு ரிமோட்

கடந்த காலத்தை மற்ற
என்னிடம் ஒரு ரிமோட்
இருந்திருந்தால் ...

வேகமாய் உன்னிடம்
ஓடி வந்து கொடுத்திருப்பேன்,
நீயாவது தப்பி பிழைத்துக்கொள்
எதிர் கேள்வி கேட்க்காமல்,
எங்காவது ஓடி பிழைத்துக்கொள்
என கூறியிருப்பேன்..

காலம் தன்
கூறிய நகங்களால்
உன்னை காயப்படுத்தியதை
கனவிழும்  அனுமதிருக்கமாட்டேன்..நம்பிக்கையில்லை

எனக்கு மோட்சத்தில்
நம்பிக்கையில்லை
இங்கேயே  இப்பொழுதே
சொர்க்கம் காணவேண்டும்..
ஒரே ஒரு முறை
அந்த ரகசிய புனைபெயரால்,
என்னை காலிசெய்துவிட்டு போ.....

Friday, August 12, 2016

ஒரே ஒரு முறை

ஒரே ஒரு முறை 
அள்ளி அணைத்து விடு,
  என் நரைகள்
  விலக ,
  என் தொப்பைகள்
  குறைய,
  என் கவலைகள்
  கரைய,
  என் களங்கங்கள்
  கதற,
  என் எழும்புகள்
  நொறுங்க,
  என் நரம்புகள்
  நடுங்க..
ஒரே ஒரு முறை 
அள்ளி அணைத்து விடு..
 
 
  

ருசி கண்ட பூனை

ருசி கண்ட பூனையாய்
தினமும் அவள் அழைப்பிற்காய்
காத்திருக்கிறேன்..
   "ம்ம்ம் அப்புறம்"
 என்ற வார்த்தையை
 அவள் சொல்லி கேட்டாலே
 அதீதத்தின் ருசியை
 உணர்ந்ததாய்
கும்மாளமிடுகிறது மனது..
இன்னும் எவ்வளவோ
பாக்கி இருக்கிறது
என சொன்னால்
  "ம்ம்ம் அப்புறம்"
என கேட்டு
காலை கட்டிக்கொண்டு,
கண் சிமிட்டுகிறது
என் பூனைக்குட்டி மனது,
ருசி கண்ட பூனையாய்.... 

ரோசி

ஒரு பூனை குட்டியை
வைத்து அதிகபட்சம்
எத்தனை கவிதைகள்
எழுதிவிட முடியும் என்ற
கேள்விக்கு
உங்களை போலவே
என்னிடமும் ஒரு
ஏளனமான
பதில் இருந்தது..
  அவள் அனுதினமும்
  ஆவலாய் வந்து
  "இன்னைக்கு ரோசி
    என்ன பண்ணுச்சு
    தெரியுமா"- என
    ஆரம்பிக்கும் போது..
    வந்து விழும்
     வார்த்தைகள் அனைத்துமே
     கவிதைகள்....

உ .மு..... உ .பி....

உன்னை சந்தித்த நொடியில்,
என் வாழ்வை
உனக்கு முன் (உ .மு)
உனக்கு பின் (உ .பி )
என பகுத்து பார்க்குமளவு
ஒரு தலைகீழ்
மாற்றத்திற்கு
நான் தயாராகவே இல்லை ...

எல்லாவற்றையும்
தலைகீழாய்
மாற்றிவிட்டு ..
"நானா?"
என நீ வினவும் போது
இந்த குழந்தைதனத்திற்குள்
புகுந்து
நம் குழந்தைகளை  வளர்க்கும்
ஆர்வம் சில்லிடுகிறது....

அணில் குட்டி

உச்சி வெய்யிலில்
ஒரு வேப்ப மரத்தடியில்
குறையுடையில்
இளநீர் பருகி,
அணில் குட்டி
வேடிக்கை பார்த்து,
மாடுகளை  நீவிக்கொண்டு,
ஆடு மேய்த்துக்கொண்டு,
கோழிகளிடம் பேசும்
ஆசை நிறைவேற வேண்டும்
அல்லது
நீ அருகில் வேண்டும் .....

பட்டாம்பூச்சி

வேகமாய் பறந்து வந்து,
மெதுவாய் வந்த
என் வாகனத்தில்
மோத  எத்தனித்து விலகி சென்ற
பட்டாம்பூச்சி...

குரைக்க காதுகளை
உயர்த்தி பின்
கண் பார்த்து மௌனமான
தெருநாய் ...

மெல்ல வீட்டிற்க்குள்  எட்டிப்பார்த்து
பின்னெதுவும் சொல்லாமல்
நகர்ந்து சென்ற பக்கத்து வீட்டு பூனைகுட்டி....

கேபிள் சரியில்லை என்றதும்
பொறுமையாக முழு புகாரையும்,
கேட்டுவிட்டு உடனடியாக
சரி செய்த கேபிள்காரர்...

வாகனத்தை வெளியே எடுத்ததும்,
வேகமாய் வந்து
கதவடைத்து உதவும்
வீட்டுக்காரர்...

ஒரு வாரமாய் வீட்டிற்க்குள்
போக்கு காட்டி
பின் சாதுவாய்
சிக்கிக்கொண்டு, வெளியேறிப்போன
தவளை....

உடல்நிலை சரியில்லையென்றதும்
வேண்டுமளவுக்கு விடுமுறை
எடுத்துக்கொள்ள சொன்ன
மேலாளர்...

இவர்கள் எல்லோரும் ஏதோ
ஒரு புள்ளியில்
என்னிடம் ஒத்திசைந்து
செல்கிறார்கள்....

மா. செந்தமிழனின் ஒத்திசைவு
பற்றிய கட்டுரையை
நீங்கள் படித்திருந்தால்
மேற்பட்டவைகள் ஏன்
கொண்டாட வேண்டுமென
எளிதாய் புரியும்,
இல்லையேல் சரியான பெண்ணை
காதலித்து  பாருங்கள்....

அவள் பெருவாரியான
புள்ளிகளில் என்னிடம்
ஒத்திசைந்து செல்கிறாள்
நான் மிக சரியாய்
இருப்பதாய் சொன்ன முதல்
பெண் அவள்,
சடாரென நம்ப மறுத்து
பின் ஒத்திசைந்து செல்கிறது
இதயம்....Thursday, August 11, 2016

காதல் தீ

சமரசமற்ற எதிர்காற்றில், 
நீ தீபமேற்றிய லாவகத்தில், 
என்னுள் காதல் தீ பற்றி எரிந்தது...

வானவில்

எதிர்பாராத தருணத்தில் 
என்னுள் வானவில்லாய் நுழைந்தவள், 
என் வாழ்வின் சுவர்களெங்கும் வண்ணங்களை தெறிக்கவிடுகிறாள், 

குழப்பம்

முதல் மணியிலேயே, 
அவள் அழைப்புகள்,
 ஏற்க்கப்பட வேண்டுமென, 
ஆழ்மனது கட்டளை இட்டதும், 
என் மேல் மனது செய்து முடித்தது..... 
என்ன நடக்கிறது என்னில்.....

ஒரு தேவதை

தறிகெட்டு பறக்கின்றேன் உண்மைதான்,
ஒரு தேவதையே வந்து,
சிறகுகள் தந்தபின் பறக்காமல் இருக்க, 
நான் என்ன நானா?(நானாக நானில்லை)...

காரணம்

எப்படி இப்படி கவிதை எழுதுகிறாய்?
என ஆச்சரியமாய் கேட்கிறாள்...!!!
உன்னை பார்த்துதான்...

என் கவிதைகள் ஏறக்குறைய
"ஈ" அடிச்சான் காபி வகையறாக்கள்,
உன்னை பார்த்து அப்படியே
எழுதுகிறேன்... அவ்வளவுதான்...
இது கவிதையெனில் நீயும் கவிதையே..
LHS = RHS ...

போல

என் வாழ்வு முழுவதும் காதல் நிரம்பி, ததும்பி நிற்கின்றது ..
அவ்வப்போது சில குவளைகள் அவள் அள்ளி பருகி செல்கிறாள்...
அவள் பருக பருக இன்னும் மூர்க்கமாய், தீர்க்கமாய் சுரக்கிறது என் காதல் நதி, தாய்ப்பால் போல......

கவனிக்காமல் விடப்பட்டவை

கவனிக்காமல் விடப்பட்ட,
   ஒரு நீர் காக்கையின் 
   நீள் வட்டப்பாதை போல்,
கவனிக்காமல் விடப்பட்ட, 
   சில்வியா பிலாத்தின் 
   தற்கொலை நினைவுகள் போல்,
கவனிக்காமல் விடப்பட்ட, 
   ஒரு கவியின் 
   பின்னிரவு கவிதைகள் போல்,

நானும்,
கவனிக்காமல் விடப்பட்டவைகளுக்கான,
   ஒரு ஒழுங்கில் 
    என் வாழ்வை வாழ்ந்தேன், நேசித்தேன்....

நீ வந்தாய்,
      எவற்றையும் கவனிக்காதது போல் 
      எல்லாவற்றையும் கவனிக்கிறாய்....

 என்னுள் 
     ஒரு நீர் காக்கை 
      உயரப்பறந்து...
      தற்கொலை நினைவுகளை 
      தின்று தீர்த்து....
      கவியின் அங்கீகாரத்தை 
      அள்ளி வீசி செல்கின்றது...