Sunday, July 22, 2012

வாழ்க உன் பிடிவாதங்கள்

வாழ்க உன் பிடிவாதங்கள்,
வளர்க நம் நேசங்கள்

வேரில்லாமல் வளரும்
வினோத செடி காதல்,
மொட்டில்லாமல் பூக்கும்
வினோத பூவும் கூட....

ஒரு கோப்பை தேநீரே
உணவாம்,

ஒரு கூடை
நினவுகளே உரமாம்,

ஒரு நிமிட தரிசனமே
ஒளியாம்,

ஒரு கை இதயமே
உறைவிடமாம்...

உணவு, உறைவிடம்,ஒளியில்லாமல்
ஒரு காதல் வாடும்
சப்தம் உனக்கு
கேட்கவில்லையெனில்,
வளர்க உன் பிடிவாதங்கள்....

மாற்றம்

நான் மாறவில்லை கடைசிவரை
நீயும் மாறவில்லை ஆரம்பத்திலிருந்தே...

கதாபாத்திரம்

என் மூன்றாம் கவிதையில்
நீ கடவுள்
நான் காதலன்....

உன் மௌனபுன்னகை குடித்த
நாளின் பின்னிரவு கவிதையில்,
நீ தென்றல்
நான் காதலன்,

நம் கடைசி சந்திப்பின்
விசும்பல்களுக்கு இடையில்
எழுதிய கவிதையில்
நீ தேவதை
நான் தேவதை காதலன்...

கனமான கதாபாத்திரம்  எனக்கு
கச்சிதமான கதாபாத்திரம்  உனக்கு

நீ தேவதையாய் இருக்கும் வரை 
நான் தேவதை காதலனாகவே இருந்துவிட்டு போகிறேன்
ஒப்பனை கலைக்க மனமில்லை எனக்கு...

சிறகுகளில் விலங்கு

சிறகுகளில் விலங்கு அணிந்த
ஒற்றை பறவையே,
உன் சிறகு விலங்குக்காக
என்னை சிறைசெல்ல சொல்லாதே...

கள்ளசாவியும் ஒரு கைதியும்

என் கனவுகளை
கள்ளச்சாவியால் கலைத்தாய்,
என்னை கைதியாக்கி
காதலை வென்று காட்டினாய்,
புன்னகை காட்டி
போதை ஊட்டினாய்,
காதல் போர்வாளில்
என்னை கொல்லதுடித்தாய்,
காமம் தொடாத தூரத்தில் நின்று
என்னை கேலிசெய்து காக்கவைத்தாய்,
சுடு வார்த்தைகளில்
இதயம் கொப்பளிக்க செய்து
அது உனக்காக துடிப்பதை
நிறுத்த எத்தனித்தாய்,

சுகம்
அத்தனையும் சுகம்
இது காதல்
எந்த தந்திரத்தாலும்
எந்த யுத்தத்தாலும்
தோற்கடிக்க முடியாத
ஒரு காலாட்படை காதல்,
இது முன்னேரிசெல்லும்,
மரணம் வரையிலும்...
நீ சொல்லியனுபியபடி
வாழ்கிறேன்
வாழ்வின் பல
நிகழ்வுகள்
நினைவுகள்
நின்னையே நினைவுறுத்துகின்றன
நீ சொல்லிய வாழ்வுக்குள்
நீயே வாழ்ந்து
நீயே வீழ்ந்து
நீயே வளர்ந்து
நீயே இளைன்தொடுகிறாய்
நீ இல்லாமல்
நீ தந்த வாழ்வு
நீயகிபோனது, இது ஒரு மர்ம முடிச்சு..
அவிழ்க்க விருப்பமில்லை

நீ தந்த வாழ்வில்
நீ இல்லாமல்...
நீ சொல்லியனுபியபடி

வாழ்கிறேன் .....

Saturday, July 21, 2012

அன்று நீ


இன்னும் நினைவிருக்கிறது
அன்று நீ
நீல சுடிதார், குங்கும பூ
கால் சட்டை,

கூர் பார்வை
சற்றே சுழித்த உதடுகள்
மிருதுவான  நடுக்கத்தில்  விரல்கள்,
வேகமான துடிப்பில் இதயம்,
அலை அலையாய் வந்த
குடுமப கவுரவ காப்பீட்டு திட்டங்கள்,
வேண்டாமென சொல்லிய உதடுகள்
வேண்டுமென சொல்லிய மனது
எவ்வளவு இம்சைகிடையில்,
என்  காதலை அவள்
வேண்டாமென சொல்லி சென்றாள்...
பாவம் அவள் என சொல்லி
காதல் தன்னை, என்னை
மௌனபடுத்தி கொண்டது....
எங்களின் மௌனம் இயலாமை அல்ல...
அகிம்சை...

அன்றொருநாள் 18-01-1996

பசுவன் கோவிலில்
தை மூன்றாம் நாள்
பசுவுக்காக பொங்கல் வைப்போம்,
கோவிலருகில்
முட்டிதுறுத்தும் முகபருபோல்,
கொட்டிகிடக்கும்,
கரட்டில்(குன்று)
கவனமாய் நின்று,
காதல் வளர்ப்போம்,
எங்கள் காதலை
சுமந்து செல்ல,
ஒருத்தி ஏற்கனவே
பிறந்து விட்டதாய்
உறுதிமொழி எடுத்துதொலைத்தோம்,
முதலில்
பஞ்சு மிட்டாய் தாவணியில்
பச்சை ரவிக்கையில்
ஒருத்தி வந்தாள் ,
பின்
ஆரஞ்சு தாவணியில்
ஒருத்தி,
பின்
மையில் கழுத்து நிற தாவணியில்
ஒருத்தி,
பஞ்சு மிட்டாயோ,
ஆரஞ்சு மிட்டாயோ,
பொங்கலில் ஒரு கண்
எங்கள் புன்னகையில்
ஒரு கண் வைத்து,
எதோ சொல்லிசென்றார்கள்
அது ஒரு முற்றுப்பெறா
முழுக்கவிதை...

மிரட்டல்

தற்கொலை, மரணம், இறப்பு
எந்த வார்த்தை சொன்னாலும்
எதிர்த்து விதிர்த்து
வாயடைக்கும் நண்பர்கள்
மத்தியில், அநாயசமாய்
சொல்லிதிரிந்தேன், அந்த வார்த்தைகளை...
நெடுநாள்
காதல் கவிதை எழுதா
பாராமுகம் கண்டு,
முதல்முறை
காதல் கேட்டது
நான் தற்கொலை
செய்துகொள்ளட்டுமா?
மௌனமாய் உற்று
பார்த்தேன் காதலை,
கண்சிமிட்டி சொன்னது,
போ பொய் கவிதை எழுது...